வெளிநாடுகளில் உள்ள பரோபகாரர்கள் மூலம் 273 அத்தியாவசிய மருந்துகளை கொள்முதல் செய்வதை துரிதப்படுத்துமாறு மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சகம் வெளிநாட்டு தூதரகங்களுக்கு சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மருந்துப் பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனம், உலக வங்கி மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) ஆகியன இலங்கைக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்து விநியோகம் இறுதி கட்டத்தில் உள்ளதாக சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு மருந்துகளை வழங்க முன்வந்ததற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் பரோபகாரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள பரோபகாரர் ஒருவர் சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை சிறுவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.